Monday, April 20, 2009

குழ(த)ந்தை

உச்சி வெயில் ஒற்றைக்கால் தவமிருக்க வேண்டும்
ஒவ்வொன்றாய் வியர்வைத்துளி சேகரிக்க வேண்டும்
மூச்சுவாங்க ஓடிவந்துன் பாதம்தொட வேண்டும்
ஒவ்வொன்றாய் உன்விரல்கள் நான்துடைக்க வேண்டும்

மழைத்துளி வாயடைக்கி கடலாழம் செல்ல வேண்டும்
உன்மூச்சே என்மூச்சாய் மனம்லயிக்க வேண்டும்
மூச்சுமுட்ட வெளியேவந்து உன்முகம்காண வேண்டும்
முழுசாக என்முத்தை நானேதர வேண்டும்

ஒருகோடி மின்மினிகள் நான்பிடிக்க வேண்டும்
உன்முகமதிலே மின்னுவதை நான்ரசிக்க வேண்டும்
குறிஞ்சிப்பூ மெத்தையிட்டு நீஉறங்க வேண்டும்
உன்புன்னகையே ஞாபகமாய் நான்இறக்க வேண்டும்

இரவுமுழுதும் உன்னருகில் கண்முழிக்க வேண்டும்
உன்கனவுகளை மயிலிறகால் நான்வருட வேண்டும்
மீண்டும் ஒருபிறவி நீ பிறக்க வேண்டும்
உன்னைஎன் கருவறையில் நான்சுமக்க வேண்டும்.

No comments:

Post a Comment